கேரள மாநிலம் மலப்புரம் காளிகாவு கிராமத்தில் ரப்பர் தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு கடந்த மே மாதம் கல்லமுலா பகுதியை சேர்ந்த அப்துல் கபூர்(45) என்ற தொழிலாளி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புலி ஒன்று அவரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ரப்பர் தோட்டத்திற்குள் செல்வதற்கு பயப்படுகின்றனர். அந்த புலியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் வனத்துறையினர் அந்த ரப்பர் தோட்டத்தை சுற்றி ஆங்காங்கே கூண்டுகள் வைத்திருந்தனர்.

புலி நடமாட்டம் இருப்பதை கண்காணிப்பதற்காக அங்கு சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டது. ஆனால் அந்த புலி எந்த ஒரு கூண்டிலும் சிக்காமல் தப்பி கொண்டிருந்தது. இந்த நிலையில் ரப்பர் தோட்டத்தின் அருகே உள்ள எஸ்டேட் பகுதியில் வைத்திருந்த கூண்டில் அந்த புலி சிக்கியது என வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அந்த புலி கூட்டுக்குள் சிக்கியிருந்தது. இந்த புலியினை பார்ப்பதற்கு ஊர் பொதுமக்கள் ஏராளமான திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. கூண்டில் சிக்கிய அந்த புலி பெண் புலி எனவும், அதற்கு ஏறத்தாழ 13 வயது இருக்கும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

பின்பு அந்த புலியினை காட்டிற்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கூண்டில் சிக்கியதால் மிகவும் ஆக்ரோஷம் அடைந்த புலி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த போது கூண்டில் மோதி முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் புலிக்கு சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.