திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாம் தமிழர் கட்சி சார்பில் “மரங்களின் மாநாடு” நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஒரு காட்டிற்குள் புலிகள் நுழைந்தவுடன் அணில் கூட கண்ணில் படாமல் போகிறது. அணில்களும் சேர்ந்து வாழும் வகையில் காடுகளை வளர்க்க நாம் பாடுபடுகிறோம்.
மரங்களுக்கு மாநாடு நடத்துவது தேவையா என சிலர் கேட்பார்கள். இது மறை கழன்றதால் அல்ல, மறையை கற்றதால் தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. நாட்டிற்காக நிற்பவர்களால் தான் இப்படியான மாநாட்டை நடத்த முடியும். ஆனால் அற்ப ஓட்டிற்காக அரசியல் செய்வோர் இதைப்பற்றி சிந்திக்கவே மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “மக்களின் வாழ்க்கைக்காக பாடுபடுகிறவர்கள் தான் இந்த வேலையைச் செய்கிறார்கள். அரசு ‘மரம் நடுவோம், மழை பெறுவோம்’ என்ற வாசகத்துடன் தங்கள் பொறுப்பு முடிந்துவிட்டதாக நினைக்கிறது.
ஆனால் உண்மையான செயல் அரசியல், சேவை அரசியல் செய்பவர்களால் தான் இந்த பணி செய்யப்படுகிறது. செய்திகளுக்காக அரசியல் செய்வோர், கட்சி அரசியல், தேர்தல் அரசியல் செய்பவர்கள் இத்தகைய பொறுப்பை ஏற்க மாட்டார்கள். மக்களுக்கான அரசியல் செய்பவர்களால்தான் இப்பணிகளைச் செய்ய முடியும்” என்று சீமான் வலியுறுத்தினார்.
