
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரி அருகே அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் மருத்துவமனையில் பதற்றம் நிலவியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்க்கு சிகிச்சை அளிக்க வந்த ஒரு இளம்பெண், குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, அங்கு பராமரிப்பு பணியில் இருந்த மெஹ்தாப் என்ற நபர் அந்தக் காட்சியை தனது மொபைல்போனில் பதிவுசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவைக் கொண்டு அந்த பெண்ணை தொடர்ந்து மிரட்டிய அவர், உடல் ரீதியாக உறவுக் கொள்ள வற்புறுத்தியதாகவும், மறுத்தால் வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்புவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பரிடம் கூறியதையடுத்து குடும்பத்தினருடன் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரினை அடிப்படையாகக் கொண்டு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு குற்றம் சாட்டப்பட்ட மெஹ்தாப் என்பவரை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்பேரில், மருத்துவ காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, மெஹ்தாபின் மொபைல்போனை பறிமுதல் செய்து அதிலிருந்த ஆபாச வீடியோக்களையும் கைப்பற்றியுள்ளனர். மேலும், அவர் ஏற்கனவே சமூக வலைதளத்தில் வீடியோவை அனுப்பியதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தகவல் வெளியாகியவுடன், மருத்துவமனையின் பாதுகாப்பு மற்றும் பெண்கள் குளியலறைகளில் கண்காணிப்பு குறைபாடுகள் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குற்றவாளி மெஹ்தாப், முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும், பான் கடை அருகிலிருந்து கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.