
நாம் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். அதாவது புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளது. இந்த சிறப்பான நாளில் உணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிப்பதில் கேக் வகைகளுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் கேக் இல்லாமல் ஒருபோதும் முழுமை அடையாது. எனவே புத்தாண்டுக்கு நீங்களே வீட்டில் கேக் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை – 1 கப்
பால் – ஒன்றரை கப்
இனிப்பில்லாத கோகோ பவுடர் – கால் கப்
பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன்
டெசிகேடட் கோக்கனட் – 6 டேபிள் ஸ்பூன்
வைப்ட் க்ரீம் – தேவையான அளவு
பொடித்த சர்க்கரை – அரை கப்
உப்பில்லாத வெண்ணெய் – கால் கப்
வெண்ணிலா எசன்ஸ் – 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா – அரை ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு காய்ந்த மிக்ஸியில் ரவையை சேர்த்து நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் உப்பு மற்றும் கோகோ பவுடர் சேர்த்து நன்றாக கலந்து, ஒரு பாத்திரத்தில் பால், வெண்ணெய், சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் அனைத்தும் சேர்த்து குறைவான தீயில் அனைத்தும் கரையும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். இதனை கொதிக்க விடக்கூடாது . இந்த மிதமான சூட்டில் உள்ள கலவையை மாவில் சேர்க்க வேண்டும். மெதுவாக அனைத்தும் கலந்து வரும் வரை கலக்க வேண்டும். இவ்வாறு தயார் செய்த கேக் மாவை மூடி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
அதனை 150 டிகிரியில் 15 நிமிடங்கள் ஃப்ரீ ஹீட் செய்ய வேண்டும். கேக் டின்னில் வெண்ணை தடவி சிறிது காய்ந்த மாவை சேர்த்து தட்ட வேண்டும். அதன் பிறகு கேக் மாவில் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு கேக் டின்னில் மாவை சேர்த்து 150 டிகிரி செல்சியஸில் அரை மணி நேரம் வரை பேக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு கடாயில் டெசிகேட்டட் கோக்கனட்டை குறைவான தீயில் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அதனை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்த பிறகு அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் பொடித்த சர்க்கரையை சேர்க்க வேண்டும். பேக் செய்த கேக்கில் சிறிது வைப்ட் கிரீமை பரப்ப வேண்டும். தேங்காய் வைத்து முழுமையாக கார்னிஷ் செய்த பிறகு பரிமாறலாம்.