நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் தொடங்கி வைத்துள்ளார். இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி முன்னிலை வகித்துள்ளார். வட்டார கல்வி அலுவலர் சுப்பிரமணியன் பேசியுள்ளார்.

இந்நிலையில் முகாமில் 18 வயதிற்குட்பட்ட 103 மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் பயனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், மருத்துவ காப்பீடு பெற்று தருதல், இலவச பஸ் பயணச்சீட்டு பெற்று தருதல், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.