தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை விநியோகம் அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இதுவரை சுமார் 2.80 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் ரேஷன் கார்டு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என்று முதல்வர் உறுதி அளித்திருந்தார். புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கிய பிறகு புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தகுதி உள்ள பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.