
பிரபல ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் புதிய ஐபேட் ப்ரோ மாடலை அறிமுகப்படுத்தியது. இதில் புதிய 13 இன்ச் OLED display, M4 சிப்செட் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கும் நிலையில் இது தொடர்பான விளம்பர வீடியோவை ஆப்பிள் வெளியிட்டது. அந்த விளம்பர வீடியோவில் பெரிய நசுக்கும் இயந்திரம் ஒன்று கணினிகள், இசைக்கருவிகள், சிற்பங்கள், பெயிண்ட் மற்றும் கேமராக்கள் போன்ற ஏராளமான பொருட்களை நசுக்குவது போன்று இடம்பெற்று இருந்தது.
அதாவது நசுக்கப்படும் பொருட்கள் அனைத்தும் புதிய ஐபேட் ப்ரோ என்று அந்நிறுவனம் விளம்பரப்படுத்த முயற்சித்தது. இந்த விளம்பர வீடியோவுக்கு ஆன்லைனில் பலரும் எதிர்ப்புகள் தெரிவித்தனர். அதாவது மனித முயற்சி மற்றும் பயனுள்ள பொருட்களை அழிப்பது மோசமான விளம்பரமாக அமைந்துள்ளது என சர்ச்சைகள் எழுந்த நிலையில் இதற்கு தற்போது ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் நாங்கள் புதிய முயற்சியில் தங்களுடைய கற்பனைகள் மற்றும் யோசனைகளை ஐபேட் மூலம் வெளிப்படுத்த முயற்சித்தோம். ஆனால் அது தவறாக மாறிவிட்டது. இதற்காக எங்களை மன்னித்து விடுங்கள் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.