மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே முழுவதுமாக தயார் செய்யப்பட்ட அதிபரைவு ரயில்கள் வந்தே பாரத் ரயில்கள் என்ற பெயரில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்கள் மூலமாக குறைவான நேரத்தில் பயண இடத்தை பயணிகள் சென்றடைய முடியும். தற்போது 31 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 26 ரயில்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் ரயில் பயணிகளிடம் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் கேட்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ஒன்பது வந்தே பாரத் ரயில்களிலும் முக்கிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி இருக்கைகளின் சாய்வு கோணம் பயணிகளின் வசதிக்காக உயர்த்தப்படும் என்றும் இருக்கை குஷன்களின் தன்மை முன் இருந்ததை விட வசதியாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எக்ஸிக்யூட்டிவ் பெட்டிகளில் உள்ள இருக்கைகளின் நிறம் நீல நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே பயணிகளுக்கான ஃபுட் ரெஸ்ட் மற்றும் சார்ஜிங் பாயிண்ட், இருக்கைகளின் பின்புறம் உள்ள நாளிதழ்கள், புத்தகங்கள் வைக்கும் பகுதிகளின் வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் தடையின்றி செல்ல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு மாதங்களில் 9 வந்தே பாரத் ஆரஞ்சு நிற ரயில்கள் செயல்பாட்டிற்கு வரும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.