காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் செரப்பணஞ்சேரி பகுதியில் உள்ள சந்தையில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெரியார் தெருவில் உள்ள ஒரு வீட்டை சித்திரைச் செல்வன்(35) என்ற வாலிபர் வாடகைக்கு எடுத்து அங்கு போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா, கூலிப் மற்றும் ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அவற்றை மணிமங்கலம் பகுதியில் உள்ள வெளிச்சந்தையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவற்றின் மொத்த எடை 150 கிலோ ஆகும். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சித்திரை செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.