சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மல்லாக்கோட்டை பகுதியில் மெகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரி அமைந்துள்ளது. அங்கு கடந்த மே 20-ஆம் தேதி ராட்சத பாறைகள் பாறைகள் உருண்டு விழுந்து ஆறு தொழிலாளர்கள் பாறையின் இடையே சிக்கிக் கொண்டனர். அவர்கள் முருகானந்தம்(47), ஆறுமுகம்(52), மைக்கேல்(47), ஆண்டிசாமி, கணேசன் மற்றும் ஹர்ஷித் ஆகிய ஆறு பேர் ஆகும்.
இதில் முருகானந்தம், ஆறுமுகம் மற்றும் மைக்கேல் ஆகிய மூவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆண்டிசாமி, கணேசன் மற்றும் ஹர்ஷித் ஆகிய மூவரும் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டனர். ஹர்ஷித்தின் உடல் பாறைகளின் இடுக்கில் சிக்கிக் கொண்டதால் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பே ஹர்ஷித்தின் உடல் வெளியே எடுக்கப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முருகானந்தமும், ஆறுமுகமும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மைக்கேல் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கல்குவாரியின் உரிமையாளரான கமலதாசன் மற்றும் மேற்பார்வையாளர் கலையரசன் இருவரையும் கைது செய்தனர்.
சம்பவம் நடந்த கல்குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யுமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பாறையின் இடுக்கில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
