தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாணி ஜெயராம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்..

சென்னை ஹாடோஸ் சாலையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78)இன்று காலை உயிரிழந்தார். வீட்டுக்கு வந்த பணிப்பெண் கதவை தட்டியும் வாணி ஜெயராம் திறக்காததால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்த்தபோது வீட்டினுள் வாணி ஜெயராம் தலையில் அடிபட்டு ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இதையடுத்து இயற்கைக்கு மாறான மரணம் என சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூறு ஆய்வுக்கு பிறகு தான் வாணி ஜெயராம் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே வாணி ஜெயராம் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாணி ஜெயராம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய திரையுலகின் புகழ்பெற்ற இசைக் குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி கலைவாணி என்ற திருமதி வாணி ஜெயராம் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.

தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்து உலகம் முழுக்க தமது இன்னிசையின் இனிமையால் புகழ்பெற்றவர். தமிழ் உட்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழியாப் புகழ் பெற்ற பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர். அண்மையில் அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட போது எனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தேன். அறிவிக்கப்பட்ட விருதைப் பெரும் முன்னரே அவர் இவ்வுலகை விட்டு பிரிந்து செல்ல நேர்ந்தது பெரும் துயரை அளிக்கும் செய்தியாகும்.

பழம்பெரும் பின்னணிப் பாடகியான திருமதி வாணி ஜெயராம் அவர்களின் மறைவு இசையுலகை பொருத்தவரை ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திருமதி வாணி ஜெயராம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்..