கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹங்கலா கிராமத்தில் ஆனந்த்-சுபா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு காது குத்த முடிவு செய்த பெற்றோர் காதணி விழா நடத்தினர். ஆனால் குழந்தைக்கு காது குத்தும் போது வலிக்க கூடாது என்று அவர்கள் நினைத்தார்கள். இதற்காக மயக்க ஊசி போட முடிவு செய்து பொம்பலபுரா ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்றுள்ளனர். அந்த டாக்டர் நாகராஜ் குழந்தையின் இரு காதுகளிலும் மயக்க ஊசி போட்டுள்ளார். இதற்காக டாக்டர் ரூ. 200 வாங்கியுள்ளார். அந்தக் குழந்தைக்கு மயக்க ஊசியின் வீரியம் என்பது அதிகமாக இருந்துள்ளது. இதனால் வாயில் நுரை தள்ளி குழந்தை மயங்கி விழுந்தது.

உடனடியாக அவர்கள் அந்த மாவட்டத்தில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து  சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இதன் காரணமாக டாக்டர் நாகராஜ் தான் குழந்தையின் மரணத்திற்கு காரணம் என்று அவர்கள் கூறியதோடு அவரை பணியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் எனவும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறினர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் டாக்டர் மீது விசாரணை நடைபெறுகிறது. மேலும் டாக்டர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் உறுதி கொடுத்துள்ளது.