இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்ற ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இதனையடுத்து நாட்டின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சிமாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து விளையாட்டுத்துறை அமைச்சகம் குறுக்கிட்டு விசாரணை ஆணையம் அமைத்தது. மேரிகோம் தலைமையிலான ஆணையமானது விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்தது. எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் டெல்லியில் போராட்டத்தில் இறங்கினர்.

இந்நிலையில் மல்யுத்த வீராங்கனைகள் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்தது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மல்யுத்த வீராங்கனைகள் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்த பிரியங்கா காந்தியுடன் இருந்த செயலாளர் கூட ஒரு பாலியல் குற்றவாளியே என பாஜகவை சேர்ந்த பபிதா போகத் குற்றச்சாட்டு கூறி உள்ளார்.