
சென்னை தலைமைச் செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையால் உரிய நிதி வழங்காமலும் புதிய திட்டம் கொடுக்காமலும் தமிழகத்தை வஞ்சிக்கிறது.
மாநிலத்தில் மத்திய திட்டங்களை தற்போது நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து கூட்டத்தில் பேசினோம். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கி வருகிறது. இதில் எப்படி வீடு கட்ட முடியும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு வழங்கக்கூடிய நிதி போதுமானதாக இல்லாததால் மக்கள் வீடு கட்ட வேண்டும் என்பதற்காக மாநில அரசு வழங்க வேண்டிய நிதியை கூடுதலாக வழங்குகின்றது. இதனால் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கக்கூடிய நிதியை மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். கிராம சாலைகள் திட்டம் தமிழகத்தில் ஏதும் நிறைவேற்ற முடியாத சூழல் இருப்பதால் அதையும் நிறைவேற்ற வேண்டும் என்று கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.