தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது, மதுபோதையில் வாகனத்தில் ஏறி ரகளையில் ஈடுபட்ட தனது கட்சித் தொண்டரை விசிக தலைவர் தொல். திருமாவளவன் கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுளம் சட்டமன்றத் தனித் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘பானை’ சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக, அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று பெரியகுளம் பகுதிக்கு வருகை தந்தார். அங்கு திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

திருமாவளவன் பேசத் தொடங்கியபோது, கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த சிலர் மதுபோதையில் அவர் நின்றிருந்த பிரசார வாகனத்தின் மீதேறி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் திருமாவளவனால் தொடர்ந்து பேச முடியாத சூழல் ஏற்பட்டது. போதையில் இருந்தவர்களை வாகனத்தை விட்டு கீழே இறங்குமாறு திருமாவளவன் பலமுறை எச்சரித்தும், அவர்கள் அதைக் கேட்காமல் கூச்சலிட்டபடி அங்கும் இங்கும் நகர்ந்து இடையூறு செய்தனர்.

தொடர் இடையூறால் கடும் ஆத்திரமடைந்த திருமாவளவன், அருகில் நின்றிருந்த ஒரு இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். “நான் பேசவா? வேண்டாமா?” என ஆவேசமாகக் கேட்ட அவர், அவர்களை உடனடியாகக் கீழே இறங்குமாறு கட்டளையிட்டார். இருப்பினும், அந்த இளைஞர்கள் வாகனத்தை விட்டு இறங்காமல் அவர் பேசும்போதும் பின்னால் நின்று கொண்டு கூச்சலிட்டனர்.

இந்தச் சம்பவத்தால் பிரசாரக் கூட்டத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. பின்னர் முக்கிய நிர்வாகிகள் தலையிட்டு அந்த இளைஞர்களை அப்புறப்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பிரசாரத்தை முடித்த பின், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவிப்பார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், தொண்டர்களின் இத்தகைய ஒழுங்கீனமான செயலால் அதிருப்தியடைந்த அவர், சிலைக்கு மாலை அணிவிக்காமலேயே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மேலும் தலைவர் தனது தொண்டரையே அறைந்த இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.