
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கும் திருச்செந்தூருக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். அந்த வகையில் இன்று வார விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினம் என்பதால், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைத் தவிர, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திருச்செந்தூர் வந்தனர். அதிக பக்தர்கள் திரண்டதை கருத்தில் கொண்டு, கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் விமரிசையாக நடைபெற்றன.
காலையில் இருந்து பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி, நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சுபமுகூர்த்த நாளானதால், கோவில் வளாகத்தில் பல திருமணங்கள் நடைபெற்றன. பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்த நிலையில், திருச்செந்தூருக்கு வந்த காரைக்குடியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஓம்குமார், நீண்ட நேரம் வரிசையில் நின்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.