திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் அருகே பெருவாழவந்தான் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கோவில் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் தீட்டி திருப்பணி வேலைகள் முடிவுற்று நேற்று குடமுழக்கு நடைபெற்றது. இதனை முன்னிட்டு 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

அதன் பின் நவகிரக ஹோமம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று புனித தீர்த்தங்கள் கொண்ட கடங்களை எடுத்து வேத மந்திரங்கள் முழங்க கோவிலை வலம் வந்து சிவாச்சாரியார்கள் திரௌபதி அம்மன் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தியுள்ளனர். மேலும் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.