புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் 4 வருடங்கள் படிப்பிற்கு மாநில சுகாதாரத் துறை நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வாங்கும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையானது வழங்கப்படும். இந்த தேர்வு 5 பாடங்களுக்கு தலா 20 மதிப்பெண்கள் என்று நடைபெறும். முன்பாக 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் வாயிலாக விண்ணப்பித்து அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. பிறகு டெல்லியிலுள்ள நர்சிங் கவுன்சிலிங் புது விதிமுறையை வெளியிட்டது.

அதன்படி, புதுவை மாநில அரசு செவிலியர் கல்லூரி(மதர் தெரசா) மற்றும் தனியார் செவிலியர் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் செவிலியர் கல்லூரிகளில் மாநில பொது நுழைவு தேர்வில் மாணவர்கள் வாங்கும் மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் வாயிலாக விண்ணப்பித்து பின் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை வழங்கவேண்டும் என தெரிவித்தது. இதன் காரணமாக மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதால் அதை ரத்துசெய்ய வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இப்போது புதுச்சேரியில் மட்டும் பொது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக இந்திய செவிலியர் கவுன்சில் அறிவித்து உள்ளது.