கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனையை வழங்கி, நீதித்துறையின் கம்பீரத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ள உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நீதிபதி ரவி திவாகர் அவர்களின் அதிரடித் தீர்ப்புகள் தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் பாராட்டையும் பெற்று வருகின்றன.

கொடூரமான குற்றங்களுக்கு எவ்வித இரக்கமும் காட்ட முடியாது என்பதைத் தனது தீர்ப்புகளின் மூலம் அழுத்தமாக உணர்த்தியுள்ள இவர், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சுமார் 22 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

குற்றவாளிகளின் நெஞ்சில் நடுக்கத்தையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையையும் ஏற்படுத்தியதன் மூலம், நீதித்துறை வரலாற்றில் இவர் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். நீதிபதி ரவி திவாகர் அவர்கள் முன்னதாக வாரணாசி நீதிமன்றத்தில் பணியாற்றியபோது, புகழ்பெற்ற ஞானவாபி மசூதி வழக்கில் வளாக ஆய்வுக்கு உத்தரவிட்டு முதன்முதலில் கவனத்தைப் பெற்றவர் ஆவார்.

தற்போது பரேலி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள இவர், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொடூரக் கொலைகள் போன்ற சமூகத்தைச் சீர்குலைக்கும் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குத் தயக்கமின்றி அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனையை வழங்கி வருகிறார்.

குற்றங்களின் தன்மையையும், அதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கவலையையும் ஆழமாகப் பரிசீலித்து, சமுதாயத்திற்குச் சரியான பாடத்தைப் புகட்டும் வகையில் இவர் வழங்கும் தீர்ப்புகள், குற்றவாளிகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்குகின்றன.

சட்டத்தின் ஆட்சியையும், குற்றமற்ற பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய இத்தகைய கண்டிப்பான நீதிபதிகளின் அணுகுமுறை மிகவும் அவசியமானது என்று சட்ட வல்லுநர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். “குற்றங்களுக்கு மன்னிப்பே கிடையாது” என்ற கொள்கையோடு செயல்படும் இவருடைய அதிரடித் தீர்ப்புகள், நாட்டில் அதிகரித்து வரும் கொடூரக் குற்றங்களுக்குக் கடிவாளம் போடும் என்பதில் ஐயமில்லை.

அதேவேளையில், தனது இந்த அதிரடித் தீர்ப்புகளால் தனக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல், தர்மத்தின் பக்கமும் நீதியின் பக்கமும் உறுதியாக நின்று பணியாற்றி வரும் நீதிபதி ரவி திவாகரின் துணிச்சல், இந்திய நீதித்துறையின் மகத்துவத்தை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது.