
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் அமீர். இவர் பருத்திவீரன் படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வடசென்னை படத்தில் நடித்து அசத்தலான திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் அமீர் நடித்து வருகிறார். இவர் கெவி திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நிலையில் அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது, சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனவே தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். இந்த ஒரு விஷயத்தில் வளைகுடா மற்றும் அரபு நாடுகளைப் போன்று மரண தண்டனை விதிக்க வேண்டும். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு ரவுடியை கொலை செய்துவிட்டு என்கவுண்டரில் சுட்டு கொன்றுவிட்டதாக கூறுகிறார்கள். இருப்பினும் அடுத்தடுத்து ரவுடிகள் கொலை சம்பவங்களில் ஈடுபடத்தான் செய்கிறார்கள். அப்படி எனில் அவர்களுக்கு பயம் இல்லை என்பதுதான் அர்த்தம். மேலும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டால் மட்டும்தான் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.