பெங்களூரு நகரில் டேட்டிங் செயலிகள் மூலம் அறிமுகமாகும் நபர்களை நம்பி ஏமாறும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது. காபி ஷாப்பில் சந்தித்துப் பேசலாம் என்று ஆசையாகக் காத்திருந்த இளம் கார்ப்பரேட் ஊழியர் ஒருவருக்கு, டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான பெண் ஒருவர் மூலமாகப் பெரிய அளவில் ஏமாற்றம் மிஞ்சியுள்ளது. சில நாட்களாகத் தொடர்ந்து சாட்டிங் செய்து பழகிய அந்தப் பெண்ணைச் சந்திப்பதற்காகத் தனது பிஸியான அலுவலக வேலையிலிருந்து நேரம் ஒதுக்கிச் சென்ற வாலிபருக்குப் படு மோசமான அனுபவம் காத்துக் கொண்டிருந்தது.
சந்திப்புக்கு வருவதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று அங்கே ரோன் என்பவரிடம் இருந்து ஒரு பார்சலைப் பெற்றுக்கொண்டு அதற்கு ஆன்லைன் மூலமாகப் பணம் செலுத்துமாறு அந்தப் பெண் கேட்டுள்ளார். தன் தாய்க்கு வணிகம் இருப்பதால் அவரிடம் ஆன்லைனை விட அதிக பணப் புழக்கம் இருக்கும் என்று அந்தப் பெண் கூறியதை ஆரம்பத்தில் நம்பிய அந்த இளைஞர், குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று அந்த நபரிடம் பணத்தையும் செலுத்தியுள்ளார். அதன்பிறகு சிகரெட் வாங்கி வருமாறு கூறிவிட்டு அந்தப் பெண் அங்கிருந்து நழுவியதுடன், சில நிமிடங்களிலேயே அந்தப் பெண் மற்றும் ரோன் ஆகிய இருவரின் எண்களும் உடனடியாகத் துண்டிக்கப்பட்டன.
தொடர்ந்து அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றபோது எந்தப் பலனும் கிடைக்காததால், இருவரும் முன்கூட்டியே திட்டமிட்டுத் தங்களை நம்பி வரும் அப்பாவி இளைஞர்களிடம் பணம் பறிக்கும் மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அந்த இளைஞர் தாமதமாக உணர்ந்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துகொண்டதுடன், டேட்டிங் ஆப்களைப் பயன்படுத்துவோர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இணையத்தில் பரவிவரும் இந்தப் பதிவு தற்போது பலத்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
