பாமக கட்சியின் சித்திரை முழு நிலவு மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மகாபலிபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் நேற்று மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வேனில் சிலர் சென்றனர்.

இந்த வேன் சீர்காழி அட்டாகுளம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஜய் என்பவர் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பிறகு விபத்தில் பலத்த காயமடைந்த சுந்தர், தேவா, முத்துராமன் உட்பட ஐந்து பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தற்போது இந்த சம்பவத்திற்கு மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளதோடு உயிரிழந்த விஜயின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். அவருடைய குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளதோடு விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்று உறுதி கொடுத்துள்ளார். மேலும் அவர்கள் அனைவருக்கும் தரமான மருத்துவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் விரைவில் நலமுடன் வீடு திரும்ப வேண்டிக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.