நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்நிலையில் பாஜக கட்சியின் தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. இதன் காரணமாக பாஜக கட்சி புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் பாஜகவின் புதிய தலைவராக மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தேர்தலில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள விதிஷா தொகுதியில் போட்டியிட்ட சிவராஜ் சிங் சவுகான் 11,16,460 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை மத்திய பிரதேசம் மாநிலத்தின் 29 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் அதற்கு கடுமையாக உழைத்தவர் சிவராஜ் சிங் சவுகான். இதனால் அவர் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதே நேரம் அரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர்களின் பெயர்களும் அடிபடுகிறது. பாஜக கட்சியின் விதிமுறைப்படி கட்சியின் தேசிய தலைவர் 3 வருடங்களுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.