மக்களை வழக்கம்போல ஏமாற்றும் பாஜகவின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் மத்திய அரசு நிதிநிலை அறிக்கை குறித்து விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2025-26 ஆம் வருடத்திற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பற்றி குறித்து தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள் . அந்த வகையில் நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெற்றுச்சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையால் வழக்கம் போல மக்களை ஏமாற்றும் பாஜகவின் நாடகம் தொடர்கிறது.

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ்நாடு என்ற பெயர் கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லை. எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே அதில் ஒன்றை கூடவா உங்களால் உறுதி செய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை? நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள் ,கோவை மதுரை மெட்ரோ ரயில் எதையும் கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது? இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன்? தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும், மொழியும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு தொழிலில் காட்ட வேண்டாமா? ஒன்றிய அரசு தன்னுடைய திட்டங்களில் தன்னுடைய பங்குத்தொகையை குறைத்துக் கொண்டே வருவதால் மாநில அரசு நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்