இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள விமான தளங்கள் மற்றும் முக்கிய ராணுவ தளங்களை தாக்கி அழித்தது. ஆனால் இந்தியாவின் ராணுவ தளங்களை குறிவைத்த பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

 

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தலைமை அதிகாரி இந்திய விமான தளம் அழிக்கப்பட்டதாக ஒரு வீடியோவை வெளியிட்டு கூறியிருந்தார். ஆனால் தற்போது அது உண்மை கிடையாது என பத்திரிகை தகவல் பணியகம் தெளிவுபடுத்தியுள்ளது. அதோடு அவர்கள் வெளியிட்ட வீடியோவின் முழு தகவலையும் பகிர்ந்துள்ளனர். இதன் மூலம் பாகிஸ்தான் தங்கள் மக்களை தவறான நோக்கத்தில் வழிநடத்து முயற்சியுடன் ஒரு ஏமாற்று வீடியோவை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்தியா பாகிஸ்தான் போர் குறித்த போலியான செய்திகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஏற்கனவே மத்திய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.