
சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இந்த மூன்று நாடுகளும் தங்கள் நலன்களை கருதி ஒன்றிணைத்து செயல் படும் சாத்தியக்கூறு உருவாகி வருவதாக, இந்திய தலைமை பாதுகாப்பு தளபதி (CDS) அனில் சவுகான் எச்சரித்துள்ளார்.
இது, இந்தியாவின் பாதுகாப்பு தன்மையை பாதிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். கடந்த மே 7 முதல் 10-ம் தேதி வரை இந்தியா–பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ஒரு இராணுவ மோதல், அணு ஆயுதம் கொண்ட இரண்டு நாடுகள் ஒண்றுக்கொன்று நேரடியாக மோதிய முதல் சம்பவமாக இருந்தது என்றும் அவர் விளக்கினார்.
அதே நேரத்தில், கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து 70 முதல் 80 சதவீதம் ஆயுதங்களையும் உபகரணங்களையும் வாங்கியுள்ளது என்றும், சீன இராணுவ நிறுவனங்கள் பாகிஸ்தானில் வணிக ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பது, வெளிநாடுகளுக்கு அங்கு தங்கள் செல்வாக்கை அதிகரிக்க வாய்ப்பு கொடுக்கிறது. இது இந்தியாவிற்கு புதிய பாதுகாப்பு சவால்களாக மாறக்கூடும் என்று சவுகான் கூறினார்.
இது மட்டுமல்லாமல், இந்தியா ஒரு பன்முக சமூக அமைப்பைக் கொண்ட நாடாக இருப்பதால், உள்நாட்டு அமைதி மற்றும் சமூக ஒற்றுமை மிகவும் முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “நாடு உள்ளிலேயே பலவீனமடைந்தால், வெளிநாட்டு எதிரிகள் அதைப் பயன்படுத்திக் கொள்வதற்கு சாதகமாக அமையும்.
எனவே நமது உள்நாட்டு பாதுகாப்பும் சமுதாய ஒற்றுமையும் இந்திய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன” என அவர் வலியுறுத்தினார். வங்கதேசத்தில் நிலவும் அரசியல் நிலைத்தன்மை குறைபாடு, மற்றும் மூன்று நாடுகளும் ஒருங்கிணைந்த முயற்சியில் செயல்படுவது, இந்தியாவிற்கு எதிரான பெரிய சவாலாக மாறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.