
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் முனீர் அகமது, பாகிஸ்தானைச் சேர்ந்த மினல் கானை திருமணம் செய்ததை தனது உத்தியோகபூர்வ தகவல்களில் மறைத்ததற்காக, சனிக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டார். 41-வது பட்டாலியனைச் சேர்ந்த அவர், கடந்த 2023-ஆம் ஆண்டு சியால்கோட்டில் வசிக்கும் மினல் கானை திருமணம் செய்ததற்காக அனுமதி கோரியிருந்தாலும், மேலதிகாரிகளின் ஒப்புதல் கிடைக்கும் முன்பே கடந்த மே 24-ஆம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமணம் செய்து கொண்டார். இதனால், அவரது நடவடிக்கைகள் சேவையின் ஒழுங்குக்கு எதிரானதாகவும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளதாக CRPF தெரிவித்தது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையாக, இந்தியா கடந்த வாரம் பாகிஸ்தானைச் சேர்ந்த அனைவருக்கும் வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்தது. இதன் பேரில் மினல் கானுக்கு நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த உத்தரவை எதிர்த்து ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், மே 3 அன்று இடைக்கால நிவாரணம் வழங்கிய நீதிமன்றம், மினல் கானை தற்காலிகமாக இந்தியாவில் தங்க அனுமதித்தது. இதையடுத்து, அவர் அட்டாரி எல்லையிலிருந்து மீண்டும் ஜம்முவிற்கு அழைத்து வரப்பட்டார்.
ஊடகங்களிடம் பேசிய மினல் கான், “முனீர் என் கணவர், நாங்கள் குடும்பமாக இருக்க விரும்புகிறோம். அரசாங்கம் எங்களை பிரிக்க வேண்டாம்” என உருக்கமாக கேட்டுக் கொண்டார். மேலும், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையும் கண்டித்த அவர், “அத்தகைய கொடூர சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என்றார். அவரது வழக்கறிஞர் அங்குஷ் சர்மா கூறுகையில், “மினல் கான் பார்வையாளர் விசாவை நீட்டிக்க முயற்சி செய்தபோதும், பஹல்காம் தாக்குதல் காரணமாக விசா மீதான பரிசீலனை நிறுத்தப்பட்டது” என தெரிவித்தார்.