பாகிஸ்தானின் லாகூரில் இருந்து ராவல்பிண்டிக்கு நேற்று இரவு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
ரெயில், லாகூரிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷேகாபுரா ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அதில் இணைக்கப்பட்ட 10 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டன. இந்த விபத்தில் பயணிகளில் 30 பேர் பலத்த காயங்களுடன் படுகாயமடைந்தனர். திடீரென நிகழ்ந்த இந்த விபத்து, பயணிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப்படை மற்றும் மருத்துவ குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்த பயணிகள், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைக்கு எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.
இந்த ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தடம்புரண்ட பெட்டிகளை நீக்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
