காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக நாடுகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக மத்திய அரசு சந்தேகப்படுவதால் சிந்து நதிநீரை நிறுத்தியதோடு பாகிஸ்தானியர்களுக்கு விசாவையும் நிறுத்திய உடனடியாக அவர்களை நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்ததோடு எல்லையில் வீரர்களை குவித்து வைத்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா இந்த விவகாரம் குறித்து பேசிய கருத்து தற்போது பாகிஸ்தான் ஊடகங்களில் பரபரப்பாக வெளியிடப்பட்டது சர்ச்சையாக மாறியுள்ளது.

 

அதாவது சித்தராமையா இது பற்றி கூறியதாவது, நாங்கள் போரை ஆதரிக்கவில்லை. அமைதி நிலவ வேண்டுமென்று தான் விரும்புகிறோம். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதால் காஷ்மீரில் மத்திய அரசு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். காஷ்மீரில் பாதுகாப்பை மத்திய அரசு பலப்படுத்த வேண்டுமே தவிர போர் செய்யக்கூடாது என்று கூறினார்.

இவருடைய கருத்தை பாஜக உட்பட பல தரப்பினரும் விமர்சித்த நிலையில் தற்போது சித்தர் ராமையாவின் பேட்டி பாகிஸ்தான் ஊடகங்களில் பரபரப்பாக ஒளிபரப்பப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களை பாஜக பிரமுகர்கள் தங்களுடைய எக்ஸ் பக்கங்களில் பகிர்ந்து கடுமையாக விளாசி வருகிறார்கள்.

இது தொடர்பாக கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாகிஸ்தான் ஊடகங்கள் சித்த ராமையாவை புகழ்கிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதற்காக ஜவர்கலால் நேருவை ராவல்பிண்டியில் திறந்த வெளி வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அதேபோன்று தற்போது சித்தராமையாவையும் புகழ்ந்து திறந்த வெளி வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து செல்வார்களா என்று பதிவிட்டுள்ளார்.

இதன் காரணமாக சித்தராமையா எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த பதிவில் நான் பாகிஸ்தானுடன் போருக்கு செல்லக்கூடாது என்று ஒருபோதும் சொல்லவில்லை. போர் எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது என்று தான் சொன்னேன். சுற்றுலா பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்காதது உளவுத்துறையின் தோல்வி. மத்திய அரசு போதுமான பாதுகாப்பை வழங்கவில்லை. மேலும் போர் செய்ய வேண்டிய சூழல் வந்தால் கண்டிப்பாக அதில் ஈடுபட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.