உலகப் பொருளாதார அரங்கில் இந்தியாவின் அசுர வளர்ச்சியைப் பாராட்டி, டெஸ்லா அதிபர் எலோன் மஸ்க் வெளியிட்டுள்ள கருத்து சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் அமெரிக்காவை விட இந்தியா முன்னிலையில் உள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டிய மஸ்க், “அதிகார சமநிலை மாறுகிறது” எனத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது வளர்ந்து வரும் இந்தியாவின் பொருளாதார வலிமையையும், எதிர்காலத்தில் உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தும் சக்தியாக இந்தியா உருவெடுப்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவின் இந்த அபார வளர்ச்சி, குறிப்பாக உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், உலக நாடுகளை இந்தியாவை நோக்கித் திரும்பச் செய்துள்ளன. கணிப்புகளின்படி, உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

மேலும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி விகிதம் சற்று நிதானமாக இருக்கும் வேளையில், இந்தியாவின் இந்த அதிரடி வளர்ச்சி உலகளாவிய விநியோகச் சங்கிலி மற்றும் முதலீட்டுச் சூழலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஸ்க்கின் இந்த கருத்து, இந்திய சந்தையில் சர்வதேச நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.