மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவலர் சரோஜ் துபே (65), பழங்கால நாணயங்களை வாங்கிக் கொள்வதாக கூறிய சைபர் மோசடிக்குழுவால்  ஏமாற்றம் அடைந்து, துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்த பரிதாப சம்பவம் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 1-ம் தேதி ஒரு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து வந்த அழைப்பில், “பழங்கால நாணயங்களை வாங்க லட்சக்கணக்கில் பணம் தரப்படும்” என்று கூறி, துபேவிடம் நாணயங்களின் புகைப்படங்களை கேட்டு வாங்கியுள்ளனர்.

தொடர்ந்து, ₹520 செலுத்தினால் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறி, வீடியோ மற்றும் சான்றிதழ்கள் அனுப்பி நம்பவைத்துள்ளனர். மேலும் வரி, ஜிஎஸ்டி கட்டணம் என்ற பெயரில் ₹37,000 வரை பணத்தை துபே அனுப்பியுள்ளார்.

மேலும்  ₹10,000 கேட்டபோது அவரது மனைவி நிர்மலாவுக்கு விஷயம் தெரிந்து, குடும்பத்தினர் துபேவிடம் சைபர் மோசடி குறித்து கூறியுள்ளனர். இதில் மனம் உடைந்த துபே, தனது தந்தை பெயரில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ரேவா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேக் சிங் கூறியதாவது: “சைபர் மோசடிக்கும், தற்கொலைக்குத் தூண்டுதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பழங்கால நாணயங்களை வாங்குவதாக வரும் மோசடி அழைப்புகளுக்கு மாட்டிக்கொள்ள வேண்டாம். சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் ஐபி முகவரிகள் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.