தமிழகச் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்), மக்களின் எதிர்பார்ப்புகளைச் சிறிதும் பூர்த்தி செய்யவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

​சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, தவெக அரசு தாக்கல் செய்துள்ள இந்த நிதிநிலை அறிக்கையில் மக்களுக்குப் பயன் தரும் வகையில் எந்தவொரு முக்கிய அறிவிப்புகளும் இடம்பெறவில்லை என்று சாடினார்.

​மேலும் தொடர்ந்த அவர், “முந்தைய ஆட்சியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய திட்டங்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டி, வெறும் ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் வேலையை மட்டுமே இந்த அரசு செய்துள்ளது. சட்டசபை தேர்தலின் போது மக்களுக்கு அளித்த எந்தவொரு முக்கியத் தேர்தல் வாக்குறுதியும் இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப்படவில்லை” என்று காட்டமாகத் தெரிவித்தார்.

​தவெக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமரிசித்த அவர், “கடந்த 85 நாட்கால ஆட்சியில் இந்த அரசு மக்கள் நலனுக்காக எதுவும் செய்யாமல், வெறும் ‘ரீல்ஸ்’ மட்டும்தான் போட்டுக் கொண்டிருக்கிறது” என்று அதிரடியாகக் குற்றம்சாட்டினார். தவெக அரசின் முதல் பட்ஜெட்டைக் கடுமையாகச் சாடி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இந்த விமர்சனம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.