
தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலர் உதயசந்திரன் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது கருவூலக்கணக்கு துறையுடன் அரசின் தகவல் தொகுப்பு மையம், சிறுசேமிப்பு இயக்குனரகம் மற்றும் ஓய்வூதிய இயக்குனரகம் இணைக்கப்பட்டு விட்டதாக அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தலைமை செயலக சங்கம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், கருவூல கணக்கு துறையில் இரு துறைகள் கொண்டுவரப்பட்டு 2 துறை தலைவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டதோடு, ஓய்வூதிய இயக்குனரகம் மூடப்பட்டுவிட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்பதை முதல் வாக்குறுதியாக அறிவித்திருந்த நிலையில் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தாது என்பது திட்டவட்டமாக தெரிந்து விட்டது. இதற்கு சாட்சி தான் கருவூலக்கணக்கு துறையுடன் ஓய்வூதிய இயக்குனராகம் இணைக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் கடும் கண்டனங்களை தெரிவிக்கிறது. மேலும் மீண்டும் தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் என்பது அமல்படுத்தப்பட வாய்ப்பு இல்லை என்ற தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.