மராத்தி திரைப்பட உலகின் மூத்த நடிகையாவார் ஜோதி சந்தேகர் (68). கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர், சிறிய கதாபாத்திரங்களிலிருந்து முக்கிய வேடங்கள் வரை பல்வேறு வகை படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். அவரின் இயல்பான நடிப்புத் திறமை மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களை உயிரோட்டமாக வெளிப்படுத்தும் திறன், அவரை மராத்தி சினிமாவின் பிரபலமான கலைஞர்களில் ஒருவராக உயர்த்தியது.
சமீபகாலமாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த ஜோதி சந்தேகர், கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரின் மறைவுச் செய்தி மராத்தி திரைப்பட ரசிகர்கள் மற்றும் கலை உலகினரிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது உடல் புனேயில் உள்ள வைகுந்த் மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜோதி சந்தேகர் பிரபல நடிகை தேஜஸ்வினி பண்டிடின் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மராத்தி திரைத்துறையில் அரை நூற்றாண்டுக்கு மேல் பங்களித்த அவரது மறைவு, இந்திய சினிமா உலகிற்கு ஒரு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.
