மும்பை மலாடு பகுதியில் ஒரு பழ வியாபாரி செய்துள்ள காரியம் ஒட்டுமொத்த நகரத்தையே அதிர வைத்துள்ளது. தனது பழ வண்டியில் இருக்கும் ஆப்பிள் மற்றும் மாதுளை பழங்களை எலிகள் கடித்து விடக்கூடாது என்பதற்காக, அந்த வியாபாரி ‘ராட்டோல்’ (Ratol) என்ற எலி மருந்தை பழங்களின் மீது தடவி விற்பனை செய்துள்ளார்.

மஞ்சள் பாஸ்பரஸ் நிறைந்த இந்த நச்சு மருந்து மனித உடலுக்குள் சென்றால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்து உயிருக்கே ஆபத்தாக முடியும். சில விழிப்புணர்வுள்ள பொதுமக்கள் அந்த வியாபாரி பழங்களுக்குப் பேஸ்ட் தடவுவதைக் கவனித்து பிடித்துள்ளனர்.

முதலில் மழுப்பிய அந்த வியாபாரி, பின்னர் எலிகளிடம் இருந்து பழங்களைக் காப்பாற்றவே இப்படிச் செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த வியாபாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

பழங்களை வாங்கிய பின் குறைந்தது 20 நிமிடங்கள் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து கழுவி, தோலை நீக்கிவிட்டுச் சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.