இந்திய கிரிக்கெட் அணி, 2012-க்குப் பிந்தைய காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இருதரப்பு தொடர்களில் பங்கேற்காமல் வருவது எல்லைப் பிரச்சனைகளைத் தொடர்ந்து உருவான நிலைமையே காரணமாகும். இதற்கு முன்பாகவே, 2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில், கடந்த வாரம் காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதில் 26 பேர்  உயிரிழந்தனர். இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில், பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாஹித் அப்ரிடி அளித்த ஒரு பேச்சு இந்தியர்களிடையே கடும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது. “இந்தியாவில் பட்டாசு வெடித்தாலும், பாகிஸ்தானை குறை சொல்வது போல இந்தியர்கள் பாலிவுட் நாடகமாடுகிறார்கள்,” என அவர் விமர்சித்துள்ளார். மேலும், “8 லட்சம் ராணுவம் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதே ஆச்சரியம்,” என்றும் கருத்தும் அவர் வெளியிட்டார்.

இந்தப் பேச்சு, இந்திய ராணுவத்தையும் மக்களையும் அவமதிக்கும் வகையில் இருந்ததாக பெருமளவிலான இந்தியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, முன்னாள் இந்திய வீரரும், ரசிகர்களிடையே பிரபலமானவருமான ஷிகர் தவான், சமூக வலைதளமான எக்ஸ் வழியாக, அப்ரிடிக்கு கடும் பதிலடி கொடுத்தார்.

“நாங்கள் உங்களை கார்கில் போரில் தோற்கடித்தோம். தேவையற்ற பேச்சுகளை விலக்கி, உங்கள் நாட்டை முன்னேற்றுவதில் கவனம் செலுத்துங்கள்,” என தவான் எழுதியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அப்ரிடி மீண்டும் பதிலளித்துள்ளார். “வெற்றித் தோல்வியை மறந்து விடுங்கள். இங்கே வாருங்கள், உங்களுக்குத் தேனீர் விருந்தளிக்கிறேன்,” என சற்றே கலாட்டாவும் கலாய்ப்பும் கலந்த பதிலைக் கொடுத்தார்.

அப்ரிடியின் இந்தக் கருத்து, 2019-இல் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விங்க் கமாண்டரை நினைவுபடுத்துகிறது. அவரை பாகிஸ்தான் சிறையில் வைத்தபோது, தேனீர் கொடுத்ததாக வீடியோ வெளியாகி, பின்னர் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டதையும் இது பகர்கிறது.

இதனால், அப்ரிடியின் பேச்சு மீண்டும் இந்தியர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் அவரது கருத்துக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.