ராஜஸ்தான் மாநிலத்தில் மேனகா தாமோர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 19ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பழங்குடியின பெண்கள் பற்றி பேசிய விஷயம் சர்ச்சையாக மாறிய நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது பழங்குடியின சமுதாயமும் இந்துக்களும் ஒன்று கிடையாது. அவர்களின் பண்பாடு இந்துக்களின் பண்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. எனவே அவர்கள் தாலி அணிய வேண்டாம்.

அதோடு நெற்றியில் குங்குமமும் வைக்க வேண்டாம். நானும் தாலி அணிய மாட்டேன். குங்குமமும் வைக்க மாட்டேன். ஏன் விரதம் கூட இருப்பதில்லை. பள்ளிக்கூடம் என்பது கல்வியின் கோவிலாக இருக்கும் நிலையில் அவற்றை கடவுள்களின் இல்லமாக மாற்றி வருகிறார்கள். எனவே இந்த நிலை மாற வேண்டும். அதற்கு பழங்குடியின பெண்கள் படிப்பில் கவனம் செலுத்துவதோடு விரதம் இருப்பதை நிறுத்த வேண்டும். சாமியார்கள் பூசாரிகள் சொல்வதை கேட்காதீர்கள். நாம் இந்துக்கள் கிடையாது என்று கூறினார். மேலும் இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ராஜஸ்தான் கல்வித்துறை அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.