குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில் இயங்கும் ஆல்பா சர்வதேச பள்ளி விடுதியில் ஒரு மாணவர், சக மாணவர்களால் தாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி, சமூகத்தில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 26, 2025ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று, ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு சமீபத்தில் இணையத்தில் பரவி வைரலானது. வீடியோவை பார்த்ததும், பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர்.
விடுதியில் தங்கியிருந்த 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் இடையே, ஒரு விளையாட்டு சம்பந்தமான தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறு, பின்னர் தாக்குதலாக மாறி, ஐந்து முதல் ஆறு மாணவர்கள் சேர்ந்து ஒரே மாணவனை உடல் ரீதியாக தாக்கும் அளவிற்கு சென்றது. வீடியோ வெளியாகும் வரை, சம்பவம் பற்றி குடும்பத்தினர் அறிந்திருக்கவில்லை. இதனால், மாணவனை தாக்கியவர்களிடம் மட்டுமின்றி, விடுதி மற்றும் பள்ளி நிர்வாகத்தின்மீதும் பெற்றோர்கள் கடும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
ઓનલાઇન વિડીયો જોયો ત્યારે પિતાને ખબર પડી કે દીકરા સાથે હોસ્ટેલમાં આવું થયું છે…!#school #junagadh #junagadhpolice #junagadhschool #hostel #jamawat #Jamawatupdate pic.twitter.com/13qBCBptaB
— Jamawat (@Jamawat3) September 2, 2025
விடுதியில் கண்காணிப்பு இல்லை, பள்ளி நிர்வாகம் அலட்சியமாக நடந்துகொண்டது என கூறி, பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர்கள் மற்றும் பலர் விடுதி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரினர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம், “இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் அல்ல, தனியார் அமைப்பிடம் குத்தகைக்கு எடுக்கப்பட்ட விடுதியில் நடந்ததுதான்” என தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அனைத்து பெற்றோர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
ஜூனாகத் காவல்துறையினர் புகாரின் அடிப்படையில், சிறுவர் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட மாணவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். மாணவர்கள் மைனர்கள் என்பதால், விசாரணை மிக நுட்பமாக நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று, மாவட்டக் கல்வி அதிகாரியும் விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி நிர்வாகம் அலட்சியாக நடந்து கொண்டது என உறுதியாகத் தெரிய வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பு முன்னுரிமையாகக் கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம், தனியார் பள்ளிகளின் விடுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு சீர்திருத்தங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டுவதாக சமூக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
