
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது 17 வயதுடைய 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் அந்த மாணவியிடம் திருமண ஆசை காட்டி தேனிக்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதன்படி சிறுமியை வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேபோன்று ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக 3 வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.