பல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற திருமணமான பெண்ணை, மயக்க மருந்து ஊசி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், மருத்துவர் ரவீந்திர பிரகாஷ் சர்மாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து பரேலி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது கடந்த 2021 அக்டோபரில் நடந்த சம்பவமாகும்.

சைத்பூரில் உள்ள ‘பிரகாஷ் டெண்டல் கிளினிக்’ எனும் பல் மருத்துவ மையத்தில், 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி, பெண்ணுக்கு பல் சிகிச்சை அளிக்கப்படும் போது, மருத்துவர் பல்லை பிடுங்குவதாகக் கூறி ஒரு மயக்க ஊசி கொடுத்தார்.

உடனே பெண் மயங்கிய நிலையில், அந்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை மேற்கொண்டதோடு, அதனை வீடியோவாக பதிவுசெய்து மிரட்டிக் கொண்டிருந்தார். இதுகுறித்து அறிந்த , பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பரேலி காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு, அரசு தரப்பு வக்கீல் ஏடிஜிசி சந்தோஷ் குமார் ஸ்ரீவாஸ்தவா மொத்தம் 6 சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அனைத்து ஆதாரங்களையும் பரிசீலித்த மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ராகவேந்திர மணி, மருத்துவர் ரவீந்திர பிரகாஷ் சர்மாவை குற்றவாளியாகத் தீர்மானித்து,10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.