அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான நிலோபர் கபில் வரும் 14-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது திருப்பத்தூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலோபர் கபில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். எனினும், கடந்த தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதற்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தான் காரணம் என நிலோபர் கபில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

அமைச்சர் பதவியில் இருந்தபோது, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக அவரது உதவியாளர் பிரகாசம் அளித்த புகாரின் பேரில், நிலோபர் கபில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் கட்சியில் இணைந்த போதிலும், தலைமை கே.சி.வீரமணிக்கே அதிக முக்கியத்துவம் அளித்து வந்ததால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்நிலையில், தனது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு திமுகவில் இணைய நிலோபர் கபில் திட்டமிட்டுள்ளார். வரும் 14-ஆம் தேதி ஜோலார்பேட்டை பொன்னேரியில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த மேடையிலேயே நிலோபர் கபில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆளும் கட்சியான திமுகவை நோக்கிச் செல்வது அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.