
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் வட்டாரத்தில் உமையாள்புரம், திருமண்டக்குடி, கோபுராஜபுரம், அந்தகுடி போன்ற கிராமங்களில் பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்மை உதவி இயக்குனர் பாபநாசம் சுஜாதா வருவாய்த்துறை அலுவலர்களுடன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் அவர் கூறியதாவது, அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்களில் மழை நீர் வடிய வாய்ப்பில்லாமல் தேங்கியதன் காரணமாக நெற்பயிர்கள் சாய்ந்து விட்டது. மேலும் அறுவடை பணி மிகவும் சிரமத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல் வடிகால் வசதி இல்லாத இடங்களில் இப்படி சாய்ந்து நெற்பயிர்கள் தற்போது முளைக்க தொடங்கியுள்ளது. அதனால் மேலும் தாமதிக்காமல் விவசாயிகள் அறுவடை பணிகளை முடித்திருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளின் சிரமத்தை புரிந்து கொண்டு அறிவித்துள்ள நிவாரணத்திற்கு உண்மையிலேயே பாதிப்படைந்த விவசாயிகள் மட்டும் பதிவு செய்து கொள்ள வேண்டும். வருவாய்த்துறை வேளாண்மை துறை மற்றும் ஊராட்சி துறை அலுவலர்கள் மேற்கொள்ளும் பயிர் செய்த விவர கணக்கெடுப்புக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.