
தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி அரசமரத் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி விஜயா. இவர்களது மூத்த மகன் அஜித்குமார்(27) டிப்ளமோ படித்துள்ளார். இளைய மகன் ராம்குமார்(25) டூவீலர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் அஜித் குமார் தினமும் மது குடித்துவிட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார்.
அவரை ராம்குமார் பலமுறை கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்த அஜித்குமார் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ராம்குமார் ஒயரால் அஜித் குமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை வீட்டிற்கு பின்புரம் இருக்கும் செப்டிக் டேங்கில் போட்டுவிட்டு எதுவும் நடக்காதது போல தூங்கிவிட்டார்.
அதன் பிறகு கொலையை மறைக்க மனசில்லாமல் நடுக்காவேரி காவல் நிலையத்திற்கு சென்ற விஷயத்தை கூறி சரண் அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜித் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராம்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.