முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதவியில் இருந்த போது கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக டி.ஆர் பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் குறித்த பட்டியலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர் பாலு அண்ணாமலையிடம் 100 கோடி ரூபாய் இழப்பு கேட்டு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான டி.ஆர் பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது, 21 நிறுவனங்களுக்கும் எனக்கும் தொடர்பு என அண்ணாமலை கூறியிருந்தார். அதில் 18 நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் கூறினேன். ஒன்றரை மணி நேரம் விளக்கம் அளித்துள்ளேன்.

வருகிற செப்டம்பர் 22ஆம் தேதி வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் என ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அப்போது 2004-ஆம் ஆண்டு நீங்கள் நிறைய ஊழல் செய்ததால் தான் 2009-இல் உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என கூறியதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உடனே கோபமடைந்த டி.ஆர் பாலு சரியான நேரத்தில் பதில் சொல்கிறேன். அண்ணாமலை சொல்லும் போது நான் பதில் கூறிக்கொள்கிறேன் என கோபமாக பதில் அளித்தார். மேலும் பத்தாயிரம் கோடி குறித்து நிருபர் கேள்வி எழுப்பிய போது பதில் சொல்ல முடியாது போயா எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.