இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி இருக்கும் பதான் படம் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடல் ஆபாசத்தின் உச்சம் என மிகப் பெரிய சர்ச்சைகள் கிளம்பியது. இப்பாடல் பல கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூபில் டிரெண்டாகி வருகிறது. இதற்கிடையில் பாஜகவினர் மற்றும் இந்து மத அமைப்பினர் இப்பாடலுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பதான் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய பாடல் காட்சி காரணமாக தணிக்கைதுறை, படத்தில் மாற்றங்களை பரிந்துரைத்து உள்ளது. பாடல் காட்சிகள் உள்பட சில மாற்றங்களை செய்து மீண்டும் சான்றிதழுக்காக சமர்ப்பிக்குமாறு திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி, பதான் படத்தின் தயாரிப்பாளர்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஷாருக்கானின் பதான் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடம் இருந்து (CBFC) 10-க்கும் அதிகமான வெட்டுக்களை பெற்றுள்ளது. மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் வசனங்களில் இருந்து காட்சிகள் வரை பல்வேறு மாற்றங்களை பரிந்துரைத்து உள்ளது. எனினும் தீபிகா படுகோனின் பேஷராம் ரங்கில் சர்ச்சைக்குரிய பிகினி நிறம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பாடலில் வரக்கூடிய குளோஸ்அப் காட்சிகள், சைடுபோஸ் (பகுதி நிர்வாணம்) காட்சிகள் மற்றும் உணர்வுபூர்வமான நடன அசைவுகளின் காட்சிகள் மாற்றப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் “கருப்பு சிறை, ரஷியா” என்ற வார்த்தை மாற்ற வேண்டும். அது தவிர்த்து பிரதமருக்கு பதில் ஜனாதிபதி (அ) அமைச்சர் என மாற்றப்பட வேண்டும். அத்துடன் 13 இடங்களில் பிஎம்ஓ என்ற வார்த்தையை நீக்கவேண்டும் என கூறியிருந்தது.