சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். அப்போது பட்டம் பெற மேடையேறிய புஷ்பராஜ் என்ற மாணவர், தனது கையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தையும் இணைத்து வைத்திருந்தார். ஆளுநரின் கைகளால் பட்டத்தைப் பெறும்போது, முதல்வர் புகைப்படத்தையும் சேர்த்து அவர் காட்டியது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஆளுநர் மாளிகை தரப்பினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக விழாக்களில் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஏற்கனவே பனிப்போர் நிலவி வரும் சூழலில், இந்தச் சம்பவம் அனலைக் கிளப்பியுள்ளது.

​இந்த எதிர்பாராத செயலால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம், உடனடியாகப் புஷ்பராஜைத் தொடர்ந்து மேடையேறக் காத்திருந்த மற்ற அனைத்து மாணவர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மேடையேற அனுமதிக்கப்பட்டனர். ஒரு மாணவனின் இந்தத் திடீர் அரசியல் வெளிப்பாட்டால், விழா நடக்கும் இடத்தில் பெரும் பதற்றம் நிலவியது. “பட்டம் வாங்க வந்த இடத்தில் இப்படியொரு செயலா?” என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பினாலும், சமூக வலைத்தளங்களில் அந்த மாணவனின் துணிச்சலான செயலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் விவாதங்கள் அனல் பறக்கின்றன.