நொய்டாவில் பெண் ஒருவர் மழையில் நனைந்தவாறு வீடியோ எடுப்பதற்காக இரவு நேரத்தில் சாலையின் மேல் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் பெண்ணின் நடவடிக்கைகளை கவனித்து வந்துள்ளார். இதையடுத்து திடீரென அந்த அடையாளம் தெரியாத நபர் அந்த பெண்ணின் அருகில் வந்து அவரது ஷார்ட்ஸை இழுத்து கிழித்துள்ளார். இதைப் பார்த்த அந்தப் பெண்ணின் நண்பர்கள் அவரை பிடிப்பதற்காக ஓடி வந்தனர். அப்போது அந்த அடையாளம் தெரியாத நபர் திரும்பிப் பார்க்காமல் ஓடி விட்டார்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் இச்சம்பவத்தை பற்றி அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யாமல் அதற்கு மாறாய்” நீ எதற்காக இரவு நேரத்தில் வெளியே வந்தாய்… அங்க என்ன வேலை உனக்கு அர்த்த ராத்திரியில்..!! என அப்பெண்ணிடம் கேள்வி கேட்டுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் புகார் பெற மறுத்ததால் அந்த பெண் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை தேடி சென்றுள்ளார். ஆனால் அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் இருந்துள்ளது.

இதனால் அந்த பெண் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை பற்றியும் இதற்கு காவல்துறையினர் அளித்த பதிலையும் வாக்கு மூலமாக வீடியோ பதிவு செய்து கொண்டார். அதன்பின் இந்த வீடியோவை அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் காவல்துறையினர் பெண்ணிற்கு நடந்த சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டு அந்த அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்‌.