உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டம் பர்கர் பகுதியைச் சேர்ந்த துணிக்கடை அதிபர் அசோக் கேசர்வானியின் 13 வயது மகன் ஆயுஷ், கடந்த வியாழக்கிழமை மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
சிறுவனை விடுவிக்க 40 லட்சம் ரூபாய் மீட்கும் தொகை கேட்டு மிரட்டிய கடத்தல்காரர்கள், பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்து ஆயுஷைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, சடலத்தைச் சமையலறைப் பகுதியில் ஒரு பள்ளத்தில் புதைத்துச் சிமெண்ட் பூசியுள்ளனர்.
சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சிறுவனின் வீட்டின் முன்னாள் வாடகைதாரரான கல்லு (70) மற்றும் அவரது கூட்டாளி இர்பான் ஆகியோரை இன்று (ஜன. 23) அதிகாலை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்ப முயன்றதில், போலீஸ் நடத்திய பதிலடித் தாக்குதலில் முக்கியக் குற்றவாளி கல்லு சுட்டுக் கொல்லப்பட்டார்; மற்றொரு குற்றவாளி இர்பான் காலில் காயத்துடன் பிடிபட்டார்.
சிறுவனின் மரணத்தால் ஆத்திரமடைந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள், குற்றவாளிகளின் வீடுகளை இடிக்கக் கோரி பிரயாக்ராஜ் – சித்ரகூட் தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
