
சேலம் மாவட்டம் சீராய் கடை பாலிகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜி (45). இவர் பனை ஏறும் தொழிலாளி ஆவார். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் தனது வீட்டில் இருந்து 40 பவுன் தங்க நகை 3 லட்சம் ரூபாய் பணம் திருடு போனது என ராஜி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தங்க நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். நேற்று சங்ககிரியில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் விசாரித்த போது அதிலிருந்து வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த போது அவர் நாமக்கல்லை சேர்ந்த கோவிந்தசாமி என்பதும், ராஜி வீட்டில் நகை பணத்தை கொள்ளையடித்து சென்றவர் என்பது தெரியவந்தது.
கோவிந்தசாமி தனது கூட்டாளிகளுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். கூட்டாளியின் அறிவுரைப்படி திருடிய நகைகளை விற்று பணமாக மாற்றுவதற்கு சென்றபோது கோவிந்தசாமி சிக்கி கொண்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.