
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒழலூர் பகுதியில் வேலன் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி ஆர்த்தி என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் ஆர்த்தி தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். குழந்தைகள் இருவரும் வேலனின் பராமரிப்பில் இருந்துள்ளனர். இந்த குழந்தைகள் இருவரும் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் படித்து வந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர். அப்போது மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் பள்ளிக்கு வந்து குழந்தைகளை கடத்தி சென்றதாக தகவல்கள் பரவியது.
இது தொடர்பாக வேலன் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய நிலையில் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து காணாமல் போன குழந்தைகளை தேடி வந்தனர். அந்த சமயத்தில் காவேரிப்பாக்கம் அருகே குழந்தைகள் மீட்கப்பட்டதாக தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் செங்கல்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆர்த்தி மற்றொரு நபருடன் சேர்ந்து குழந்தைகளை காரில் அழைத்து சென்றது தெரிய வந்தது. மேலும் இதன் மூலம் குழந்தைகள் கடத்தப்படவில்லை என்பது தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவின் மூலம் தெளிவாகியுள்ளது.